Thursday, July 15, 2010

அம்பது காசு - சிறுகதை

காலையில் எழுந்து, காப்பி போடலாம் என்று பார்த்தால்,பால் இல்லை..... சரி ஒரு எட்டுப் போய் வாங்கி வரலாம் என்று ஆயத்தமானேன்.

மனைவி, இந்த வேலைகளை எல்லாம் ஏற்கனவே என் தலையில் கட்டிவிட்ட படியால்,கவலையில்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தாள்.. குழந்தை கயல்,தூக்கத்தில் எதையோ நினைத்து சிரித்தபடி,தாய் தன் அருகில் இருக்கிறாளா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தூக்கத்தை தொடர்ந்தது.

கயல்- தமிழக அரசாங்கம், தமிழில் பெயர் வைக்கும் திரைப் படங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது போல,குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்கும் சாமானியருக்கும் முழு வருமான வரிச் சலுகை அளிக்க,மத்திய அரசுக்கு சிபாரிசு கடிதம் என்றாவது ஒரு நாள் எழுதும், என்ற திடமான நம்பிக்கையையும் மீறி, எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பெயர்.

வெளிக் கதவை மெதுவாக சாத்திவிட்டு படிகளில் இறங்கி சாலைக்கு வந்தேன்.

ஒரு யுவதி,செல் போனில் யாருடனோ உருகி உருகி பேசிக் கொண்டே எனக்கு எதிர் திசையிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பேசிக் கொண்டிருப்பது ஒரு யுவனுடன் தான் என்பது,அவளது குழைவிலேயே தெரிந்தது. எனக்கு என்னமோ,எதிர்காலத்தில் உருகுப் போகும் அவனது பொருளாதாரமும்,அவன் வளர்க்கப் போகும் தாடியுமே நினைவுக்கு வந்தது.

யோசித்துக் கொண்டே நடந்து வருவதில் ஒரு சவுகர்யம்,தூரம் தெரியாது.

பதினோரு ரூபாவை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்து,

" ஒரு நீல வண்ணப் பால் பாக்கெட்" என்றேன். பால்ப் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு, விட்ட வேலையைத் தொடர்ந்தார்.

"பத்து அம்பது தானே,மீதி அம்பது காசு?........." என்றேன் பதவிசாக..

"அம்பது காசு சில்லறை எல்லாம் இல்லை சார்" என்று சலிப்பாக என் முகத்தைக் கூட பார்த்து சொல்ல விரும்பாமல், சொன்னார்.

"நல்லாப் பாருங்களேன்" என்றேன் நம்பிக்கையை விடாமல்.

"நீயே பாரு " என்று எரிச்சலாக கல்லாவை திறந்து காட்டினர்.

பொக்கை வாய் கிழவியின், சிரிக்கும் வாயில் தென்படும் ஒன்றிரண்டு பற்களைப் போல,அங்கொன்றும் இங்கொன்றுமாக ருபாய் நோட்டுகளுக்கு இடையில் சில்லறை தென் பட்டது. அதில் அம்பது காசு தென்படுகிறதா என்று நான் ஆராயும் முன் கல்லாவை வெடுகென்று சாத்தி,

"பால் பாக்கெட்டை குடு,வேறு எங்காவது போயி வாங்கிக்க " என்றார் என் கையில் இருக்கும் பாக்கெட்டை பறிக்க முயற்சி செய்து கொண்டே.

அருகில் வேறு கடை இல்லாததால் தயங்கி நின்றேன்.ஜேப்படி திருடனுக்கும் இவருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.அம்பது காசு சில்லறை இல்லை என்பதை நாசுக்காக சொல்லி,பிறகு வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிருக்கலாம், அல்லது அதற்கு பதிலாக ஒரு சப்பு மிட்டாய் கொடுத்து இருந்தாலாவது வீடு போகும் வரை வாயில் போட்டு சுவைத்துக் கொண்டே சென்று இருப்பேன்.

அதற்கு மேல் அவரிடம் பேச விருப்பம் இல்லாமல், சற்று நகர்ந்து

"நாங்கள் அம்பது பைசா குறைத்து கொடுத்தால்,வாங்கிக் கொண்டு பொருள் தருவீரா ?"

என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்ப் பார்க்காமல் பால் பாக்கெட்டுடன் விறுவிறு என்று நடையை கட்டினேன்.

" காலங்காத்தால, வந்துட்டானுங்க சாவுகிராக்கிங்க......, அம்பது காசு கேட்டு கோர்ட்டுக்குக் கூட போவானுங்க போல இருக்கு "

என்று கடைக்காரர் வசை பாடியது சத்தியமாக என் காதில் விழ வில்லை.

Wednesday, July 14, 2010

முதல் மனைவி,முதல் கார் - பாகம் 1

நான் குமார். மென் பொருள் துறையில் பணி புரியும் இருபது லட்சம் பேரில் ஒருவன். என்னுடைய புதிய கார் பற்றியும் அதன் இன்ன பிற இடர் பாடுகள் பற்றியும், ஒரு நீண்ட நெடுந்தொடரகவே எழுதி விடலாம், இருந்தாலும் நமீதாவின் உடை கொள்கையைப் போல் சுருக்கமாக, ஒவ்வொன்றாக சொல்ல முயற்சிக்கிறேன்.




" கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு,ஒரு கார் உண்டா,இன்னும் அந்த ஓட்டை பைக்கில் எவள்ளவு நாள் போறது ? "

" ம்"

"ஒங்களோட வேலை பார்க்குற எல்லாரும் வாங்கல?? "

" ம்ம்"

"எது கேட்டாலும், அதனால் என்ன! உடனே வாங்கிடலாம் செல்லம்னு ஒரு பீத்தல் வேற "

" ம்ம்"

"ஒங்களுக்கு மட்டும் ஏன் இது எல்லாம் தோன மாட்டேன்குது"

" வும்ம்"

"என்ன காதுல உழுவுதா"

" வும்ம்"

"நானும் கத்தி கத்தி தொண்டை தண்ணிதான் வத்திப் போச்சு.ஒன்னும் ஒரைக்க மாட்டேன்குது" ..


காவிரில தண்ணி வத்தி போனதுக்கே கவலை இல்லாமல், அரசாங்கம் தரப் போகும் அடுத்த இலவசம் என்ன என்று குவாட்டர் போட்டு குப்புற கவிழ்ந்து யோசிக்கும் தமிழன் இதுக்கெல்லாம் கவலைப் படுவானா என்ன! என்று ஒரேயடியாக புறம் தள்ள முயற்சித்தாலும்,

நானும் எவ்வுளவு நாள் தான் சார்,இந்த "பொல்லாதவன்" படத்துல தனுஷ், சந்தானத்தை கழிப்பறை வாயிலில் மடக்கி,பிரச்சனையின் வீரியம் புரியாமல், தன் காதலியை பற்றி சிலாகித்து சொல்வாரே...

அதுக்கல்லாம் "வும்ம்" "வும்ம்" என்று அடக்கவும் முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் சந்தானம் பம்முவாரே!! அதைப் போல சொல்லி சமாளிக்க முயற்சிப்பது ??

" சரி நாளைக்கு புக் பண்ணிடலாம்" என்று வீராப்பாக சொல்லி விட்டு வேகமாக கழிப்பறை கதவை திறந்து உள்ளே நுழைந்தேன்.

-தொடரும்