Thursday, July 15, 2010

அம்பது காசு - சிறுகதை

காலையில் எழுந்து, காப்பி போடலாம் என்று பார்த்தால்,பால் இல்லை..... சரி ஒரு எட்டுப் போய் வாங்கி வரலாம் என்று ஆயத்தமானேன்.

மனைவி, இந்த வேலைகளை எல்லாம் ஏற்கனவே என் தலையில் கட்டிவிட்ட படியால்,கவலையில்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தாள்.. குழந்தை கயல்,தூக்கத்தில் எதையோ நினைத்து சிரித்தபடி,தாய் தன் அருகில் இருக்கிறாளா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தூக்கத்தை தொடர்ந்தது.

கயல்- தமிழக அரசாங்கம், தமிழில் பெயர் வைக்கும் திரைப் படங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது போல,குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்கும் சாமானியருக்கும் முழு வருமான வரிச் சலுகை அளிக்க,மத்திய அரசுக்கு சிபாரிசு கடிதம் என்றாவது ஒரு நாள் எழுதும், என்ற திடமான நம்பிக்கையையும் மீறி, எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பெயர்.

வெளிக் கதவை மெதுவாக சாத்திவிட்டு படிகளில் இறங்கி சாலைக்கு வந்தேன்.

ஒரு யுவதி,செல் போனில் யாருடனோ உருகி உருகி பேசிக் கொண்டே எனக்கு எதிர் திசையிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பேசிக் கொண்டிருப்பது ஒரு யுவனுடன் தான் என்பது,அவளது குழைவிலேயே தெரிந்தது. எனக்கு என்னமோ,எதிர்காலத்தில் உருகுப் போகும் அவனது பொருளாதாரமும்,அவன் வளர்க்கப் போகும் தாடியுமே நினைவுக்கு வந்தது.

யோசித்துக் கொண்டே நடந்து வருவதில் ஒரு சவுகர்யம்,தூரம் தெரியாது.

பதினோரு ரூபாவை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்து,

" ஒரு நீல வண்ணப் பால் பாக்கெட்" என்றேன். பால்ப் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு, விட்ட வேலையைத் தொடர்ந்தார்.

"பத்து அம்பது தானே,மீதி அம்பது காசு?........." என்றேன் பதவிசாக..

"அம்பது காசு சில்லறை எல்லாம் இல்லை சார்" என்று சலிப்பாக என் முகத்தைக் கூட பார்த்து சொல்ல விரும்பாமல், சொன்னார்.

"நல்லாப் பாருங்களேன்" என்றேன் நம்பிக்கையை விடாமல்.

"நீயே பாரு " என்று எரிச்சலாக கல்லாவை திறந்து காட்டினர்.

பொக்கை வாய் கிழவியின், சிரிக்கும் வாயில் தென்படும் ஒன்றிரண்டு பற்களைப் போல,அங்கொன்றும் இங்கொன்றுமாக ருபாய் நோட்டுகளுக்கு இடையில் சில்லறை தென் பட்டது. அதில் அம்பது காசு தென்படுகிறதா என்று நான் ஆராயும் முன் கல்லாவை வெடுகென்று சாத்தி,

"பால் பாக்கெட்டை குடு,வேறு எங்காவது போயி வாங்கிக்க " என்றார் என் கையில் இருக்கும் பாக்கெட்டை பறிக்க முயற்சி செய்து கொண்டே.

அருகில் வேறு கடை இல்லாததால் தயங்கி நின்றேன்.ஜேப்படி திருடனுக்கும் இவருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.அம்பது காசு சில்லறை இல்லை என்பதை நாசுக்காக சொல்லி,பிறகு வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிருக்கலாம், அல்லது அதற்கு பதிலாக ஒரு சப்பு மிட்டாய் கொடுத்து இருந்தாலாவது வீடு போகும் வரை வாயில் போட்டு சுவைத்துக் கொண்டே சென்று இருப்பேன்.

அதற்கு மேல் அவரிடம் பேச விருப்பம் இல்லாமல், சற்று நகர்ந்து

"நாங்கள் அம்பது பைசா குறைத்து கொடுத்தால்,வாங்கிக் கொண்டு பொருள் தருவீரா ?"

என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்ப் பார்க்காமல் பால் பாக்கெட்டுடன் விறுவிறு என்று நடையை கட்டினேன்.

" காலங்காத்தால, வந்துட்டானுங்க சாவுகிராக்கிங்க......, அம்பது காசு கேட்டு கோர்ட்டுக்குக் கூட போவானுங்க போல இருக்கு "

என்று கடைக்காரர் வசை பாடியது சத்தியமாக என் காதில் விழ வில்லை.

3 comments: